நெல்லையப்பர் கோவிலுக்கு யானை குட்டி வாங்குவதை எதிர்த்து வழக்கு... தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!
நெல்லையப்பர் கோவிலுக்கு குட்டி யானை வாங்குவதை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கிற்கு பதில் அளிக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஐகோர்ட்டில், கால்நடைகளுக்கான நல அமைப்பு தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ‘‘நெல்லையில் உள்ள நெல்லையப்பர் கோவிலுக்கு சொந்தமான காந்திமதி யானை கடந்த ஜனவரி மாதம் இறந்துவிட்டது. இதையடுத்து 5 முதல் 7 வயதுக்குள் உள்ள குட்டி யானையை உத்தரகாண்ட் வனத்துறையிடம் இருந்து வாங்க தமிழ்நாடு அறநிலையத்துறை மற்றும் வனத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.
பொதுவாக யானைகளின் ஆயுள் காலம் 70 முதல் 80 ஆண்டுகளாகும். குட்டி யானையை தாயிடம் இருந்து பிரித்து கொண்டு வருவதால், தாயின் அரவணைப்பு இல்லாமலும், வன வாழ்க்கையை இழந்தும், கடுமையாக பாதிக்கப்படும். எனவே, நெல்லையப்பர் கோவிலுக்கு 5 வயது குட்டியானையை கொண்டு வந்தால், அந்த யானை 60 ஆண்டுகளுக்கு மேல் வேதனையில் வாழும்.
அதுமட்டுமல்ல, மதுரையில் வளர்ப்பு யானை கொடுமைப்படுத்தியதாக 2015-ம் ஆண்டு வனத்துறை நடத்திய விசாரணையில் தெரியவந்தது. அதேபோல, திருச்செந்தூரில் யானை தாக்கியதில் பாகன் அண்மையில் இறந்துள்ளார். இதுபோல சம்பவம் பல அண்மை காலங்களில் நாடு முழுவதும் நடந்துள்ளது.
இதனால், தனியாக யானைகளை வைத்துக்கொள்ள தனியாருக்கும், கோவில்களுக்கும் அனுமதி வழங்கக்கூடாது என சுப்ரீம் கோர்ட்டும், ஐகோர்ட்டும் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளன. எனவே, நெல்லையப்பர் கோவிலுக்கு ‘ரோபோ' யானை வழங்க தயாராக இருப்பதால், உத்தரகாண்டில் இருந்து குட்டி யானையை கொண்டுவர தமிழ்நாடு அரசுக்கு தடை விதிக்க வேண்டும்'' என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர், ‘‘தமிழ்நாடு வனத்துறை, இந்து சமய அறநிலையத்துறை, நெல்லையப்பர் கோவில் நிர்வாகம் பதிலளிக்க வேண்டும்'' என உத்தரவிட்டுள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!