முதல்வர் விஜய் வெற்றியை எதிர்த்து நீதிமன்றத்தில் மனுதாக்கல்.. செல்லாததாக அறிவிக்க கோரி திமுக வேட்பாளர் வழக்கு!
அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திருச்சி கிழக்குத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழக முதலமைச்சரும், தவெக தலைவருமான விஜய்யின் வெற்றிக்கு எதிராகத் திமுக தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திருச்சி கிழக்குத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டுப் தோல்வியடைந்த முன்னாள் எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார்.
திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் தனது மனுவில், தேர்தல் பிரச்சாரத்தின் போது, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை மீறி, முதலமைச்சர் விஜய் சிறு குழந்தைகளைத் தனது அரசியல் ஆதாயத்திற்காகப் பிரச்சாரக் களத்தில் பயன்படுத்தினார். தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தபோது, தனக்கு எதிராக நிலுவையில் உள்ள வருமான வரித்துறை சார்ந்த வழக்கு விபரங்களை முதலமைச்சர் விஜய் திட்டமிட்டே மறைத்துள்ளார்.
இந்த வழக்கில் முக்கியத் திருப்பமாக, முதலமைச்சர் விஜய் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளதை மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார். "திருச்சி கிழக்குத் தொகுதியில் முதலமைச்சர் விஜய் முறைகேடான வழிகளில் வெற்றி பெற்றுள்ளார். மேலும், அவர் தனது எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்துள்ளார். எனவே, அவரது வெற்றியைச் செல்லாது என்று அறிவிப்பதோடு, அந்தத் தொகுதியில் இரண்டாமிடம் பிடித்த என்னை (இனிகோ இருதயராஜ்) முறைப்படி வெற்றி பெற்றவராக நீதிமன்றம் அறிவிக்க வேண்டும்."
தமிழகத்தில் புதிய ஆட்சி பதவியேற்ற குறுகிய காலத்திலேயே, முதலமைச்சரின் தொகுதி வெற்றியை எதிர்த்துப் பிரதான எதிர்க்கட்சியான திமுக நீதிமன்றப் படியேறியிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மனு விரைவில் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.