கோயில்களில் செல்போன் தடைக்கு எதிராக மறுபரிசீலனை கோரி முதல்வருக்கு கோரிக்கை மனு!

 

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள முக்கியக் கோயில்களில் செல்போன் பயன்பாட்டிற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் ஆன்மிகச் சூழலையும் புனிதத் தன்மையையும் பாதுகாக்கும் நோக்கில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள திருச்செந்தூர், பழனி, ராமேஸ்வரம், சமயபுரம், ஸ்ரீரங்கம், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் சென்னை கபாலீஸ்வரர், பார்த்தசாரதி கோயில் உள்ளிட்ட 52 கோயில்களில் செல்போன் தடை கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் அறகண்டநல்லூரைச் சேர்ந்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கே.ராஜன், தமிழக முதல்வர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் ஆணையருக்கு அனுப்பியுள்ள மனுவில் இந்தத் தடையை மறுபரிசீலனை செய்யக் கோரியுள்ளார். கோயில்களில் செல்போன் பயன்பாட்டுக்குத் தடை விதிப்பதும், அதற்காகப் பாதுகாப்பு மையங்களில் கட்டணம் வசூலிப்பதும் பெண்கள், முதியவர்கள் மற்றும் வெளியூர் பக்தர்களுக்கு அவசர கால தொடர்பில் பெரும் சிரமத்தை ஏற்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோவில்களில் நடைபெறும் நிர்வாகக் குறைபாடுகள் மற்றும் முறைகேடுகளை ஆதாரத்துடன் வெளிக்கொண்டு வருவதற்குச் செல்போன்கள் அவசியமாக உள்ளதாகவும், கருவறை போன்ற மிக முக்கியமான ஆன்மிகப் பகுதிகளில் மட்டும் தடை விதித்துவிட்டு, மற்ற பகுதிகளில் சில கட்டுப்பாடுகளுடன் செல்போனை அனுமதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

மேலும், செல்போன் பாதுகாப்பு மையங்களில் வசூலிக்கப்படும் கட்டணத்தை முற்றிலும் ரத்து செய்து, பக்தர்களுக்கு இலவசப் பாதுகாப்பு வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.