நள்ளிரவில்  பரபரப்பு... ரவுடி வீட்டில் பெட்ரோல் குண்டுகள் வீச்சு!  

 

சென்னை வானகரம் அடுத்த துண்டலம் பகுதியைச் சேர்ந்த 26 வயதான ராஜ்குமார் என்ற ராஜி, ஆட்டோ ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், வானகரம் காவல் நிலைய சரித்திரப்பதிவேடு குற்றவாளியாகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 2 இருசக்கர வாகனங்களில் வந்த 4 மர்ம நபர்கள், பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்களில் தீ வைத்து இவரது வீட்டின் வாசலில் வீசியுள்ளனர். அடுத்தடுத்து வீசப்பட்ட 2 பெட்ரோல் குண்டுகளும் பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறித் தீப்பற்றி எரியத் தொடங்கியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வெடிச்சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்துத் தண்ணீரை ஊற்றித் தீயை அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. சம்பவ இடத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படாத நிலையில், வானகரம் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். கஞ்சா விற்பனை தொடர்பாக ராஜ்குமாருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு கும்பலுக்கும் இடையே தொடர் முன்விரோதம் இருந்தது தெரியவந்தது. இந்தக் கஞ்சா வியாபாரப் போட்டி காரணமாக ராஜ்குமாரை மிரட்டி அச்சுறுத்தும் நோக்கில் இந்த பெட்ரோல் குண்டு வீச்சு நடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டை நடத்திய காவல் துறையினர் அய்யப்பன்தாங்களைச் சேர்ந்த ஜீவா (20), ராகுல் (21), கோகுல் (23) உட்பட 4 பேரை அதிரடியாகக் கைது செய்தனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய பரத் உள்ளிட்ட தலைமறைவாக உள்ள மற்ற நபர்களைக் காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். நள்ளிரவில் ரவுடியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் வானகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.