பெட்ரோல் கேன் வெடித்து விபத்து.. 2 பேர் பலி - நீலகிரி கோத்தகிரி அருகே சோகம்!
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே விநாயகர் சிலை பிரதிஷ்டை நிகழ்ச்சியின்போது பெட்ரோல் கேன் வெடித்து விபத்துக்குள்ளானதில், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கோத்தகிரி அருகே கடந்த 15-ஆம் தேதி விநாயகர் சிலை பிரதிஷ்டை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இசை வாத்தியக் குழுவினர், தங்களது வாத்தியக் கருவிகளைச் சூடு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அந்தச் சமயத்தில் எதிர்பாராதவிதமாக அங்கு வைக்கப்பட்டிருந்த பெட்ரோல் கேன் திடீரென வெடித்துச் சிதறியது. இந்த பயங்கர விபத்தில் வாத்தியக் குழுவைச் சேர்ந்த 3 பேர் படுகாயமடைந்தனர்.
விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த சிவனேசன் (58), சஞ்சய் ஹரிஹரன் (19) ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களுடன் பலத்த காயமடைந்த ராகுல் என்ற இளைஞருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.