"பெட்ரோல், டீசல், பருப்பு விலை உயரும்" - ராகுல் காந்தி எச்சரிக்கை!
இந்தியாவில் வரும் நாட்களில் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி மிகக் கடுமையாக உயரக்கூடும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எச்சரித்துள்ளார். மத்தியில் ஆளும் நரேந்திர மோடி அரசின் பொருளாதாரக் கொள்கைகளைச் சாடி அவர் இத்தகைய விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
சர்வதேசச் சூழல்கள் மற்றும் உள்நாட்டுப் பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக, இந்தியாவில் மிக விரைவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை கிடுகிடுவென உயரப் போகிறது. பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் ஒட்டுமொத்தப் பொருளாதார அமைப்பையே கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்றுவிட்டார். இதன் நேரடிப் பாதிப்பை ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தங்களது அன்றாட வாழ்க்கையில் சந்திக்க நேரிடும் என்று ராகுல் காந்தி கவலை தெரிவித்துள்ளார். மக்களுக்கு ஒரு நீதியும், பிரதமருக்கு ஒரு நீதியுமா என்ற கோணத்தில் ராகுல் காந்தி கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
"இந்திய மக்கள் யாரும் வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டாம், உள்நாட்டிலேயே இருங்கள்" என்று பிரதமர் மோடி பொதுமக்களுக்குப் பல்வேறு அறிவுரைகளைக் கூறுகிறார். ஆனால், அதே பிரதமர் மோடி மட்டும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள அதிநவீன சொகுசு விமானங்களில் தொடர்ச்சியாக வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
மக்களின் அத்தியாவசியத் தேவைகளான எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்தத் தவறிய மத்திய அரசு, விளம்பர அரசியலில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாக ராகுல் காந்தி தனது உரையில் குற்றம் சாட்டியுள்ளார்.