இன்று முதல் அமல் - பெட்ரோல் லிட்டருக்கு ரூ.5 குறைப்பு, டீசல் ரூ.3 குறைப்பு!
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் எரிபொருள் விநியோக நிறுவனமான நயாரா எனர்ஜி , நாடு முழுவதும் உள்ள தனது எரிபொருள் நிலையங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் கணிசமாகக் குறைத்து உத்தரவிட்டுள்ளது.
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியைத் தொடர்ந்து, நயாரா நிறுவனம் இந்த விலைக் குறைப்புப் பலனைப் பொதுமக்களுக்கு நேரடியாக வழங்கியுள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5 வரை குறைக்கப்பட்டுள்ளது. டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 வரை குறைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விலைக் குறைப்பு இன்று முதல் நாடு முழுவதும் உள்ள நயாராவின் சுமார் 7,000-க்கும் மேற்பட்ட பங்க்-களில் உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது. இருப்பினும், மாநிலங்களின் உள்ளூர் வாட் வரியைப் பொறுத்து இறுதி விற்பனை விலை சற்று மாறுபடலாம்.
கடந்த மார்ச் மாதம் வளைகுடா மற்றும் மேற்கு ஆசியப் பகுதிகளில் ஏற்பட்ட கடுமையான புவிசார் அரசியல் போர் பதற்றங்கள் காரணமாக, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் பெரும் தட்டுப்பாடு நிலவியது. இதனால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து, தனியார் நிறுவனங்கள் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
வளைகுடா நாடுகளின் கடல்சார் போக்குவரத்து மற்றும் விநியோகப் பாதைகள் முழுமையாகச் சீரடைந்துள்ளதால், கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளது. இதன் காரணமாகவே, மார்ச் மாதத்தில் உயர்த்தப்பட்ட அதே அளவிலான விலையை நயாரா நிறுவனம் தற்பொழுது மீண்டும் குறைத்துள்ளது.
தனியார் நிறுவனமான நயாரா இந்த விலைக் குறைப்பை அறிவித்துள்ள போதிலும், இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தங்களது எரிபொருள் விலையில் தற்போதைக்கு எந்த மாற்றமும் செய்யவில்லை.