பெட்ரோல், டீசலுக்கான கலால் வரி குறைப்பு... மத்திய அரசு அதிரடி! 

 

சர்வதேச சந்தையில் நிலவி வரும் ஈரான் போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை விண்ணைத் தொட்டுள்ள நிலையில், இந்திய மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் மத்திய அரசு அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு தற்போது அதிரடியாகக் குறைத்துள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்கனவே ரூ.13 ஆக இருந்த கலால் வரி இப்போது வெறும் ரூ.3 ஆகக் குறைந்துள்ளது.

இன்னும் ஒரு படி மேலே போய், டீசல் மீதான கலால் வரியைப் பூஜ்ஜியமாக மத்திய அரசு குறைத்துள்ளது. அதாவது டீசலுக்கு இனி மத்திய கலால் வரி கிடையாது என்ற அதிரடி முடிவை எடுத்துள்ளது. ஈரான் போரால் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு உற்பத்தி நிறுவனங்களுக்குப் பெரும் சுமை ஏற்பட்டுள்ள நிலையில், இந்த வரி குறைப்பு அந்த நிறுவனங்களுக்குப் பெரும் ஆறுதலாக இருக்கும். இதன் மூலம் பொதுமக்களுக்கு விற்கப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தாறுமாறாக உயர்வது தவிர்க்கப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

போர்ச் சூழலால் சர்வதேச அளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் இந்தத் துணிச்சலான முடிவு மற்ற நாடுகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும், போக்குவரத்துச் செலவுகளைக் குறைக்கவும் இந்த வரி குறைப்பு பெரும் உதவியாக இருக்கும். பெட்ரோல், டீசல் விலை உயரும் என்று பயந்து கொண்டிருந்த வாகன ஓட்டிகளுக்கு மத்திய அரசின் இந்த அறிவிப்பு ஒரு மிகப்பெரிய நிம்மதியை அளித்துள்ளது