மேற்கு ஆசியப் போர் நெருக்கடி... பெட்ரோல் விலையை இந்தியா கட்டுக்குள் வைத்திருப்பது எப்படி?

 

மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றம் காரணமாக உலக நாடுகள் கடும் எரிசக்தி நெருக்கடியைச் சந்தித்து வரும் நிலையில், இந்தியா மட்டும் பெட்ரோல் விலையை லாவகமாக நிலையாக வைத்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 70 டாலரிலிருந்து 126 டாலராக உயர்ந்த போதும், இந்திய அரசு எடுத்த அதிரடி நடவடிக்கைகளால் உள்நாட்டில் விலை உயர்வு தடுக்கப்பட்டுள்ளது. ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற வளர்ந்த நாடுகளில் பெட்ரோல் விலை 200 ரூபாயைத் தொட்டுள்ள நிலையில், இந்தியாவில் இன்னும் 100 ரூபாய்க்குள்ளேயே நீடிப்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசு பெட்ரோல் மீதான கலால் வரியைக் குறைத்ததுடன், எண்ணெய் நிறுவனங்கள் சந்திக்கும் நஷ்டத்தைப் பொருட்படுத்தாமல் நுகர்வோருக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் செயல்பட்டு வருகிறது. இது குறித்துப் பேசிய பெட்ரோலியத் துறை இணைச் செயலாளர் சுஜாதா சர்மா, எல்பிஜி உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் பிஎன்ஜி இணைப்புகளை ஊக்கப்படுத்துதல் போன்ற திட்டங்கள் எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க உதவியுள்ளதாகத் தெரிவித்தார். குறிப்பாக டெல்லியில் இப்போதும் ஒரு லிட்டர் பெட்ரோல் சுமார் 95 ரூபாய்க்கே விற்பனை செய்யப்படுவது இந்திய அரசின் திட்டமிடலுக்குக் கிடைத்த வெற்றியாகும்.

போர்ச் சூழலால் ஹார்முஸ் ஜலசந்தி போன்ற முக்கியப் போக்குவரத்துப் பாதைகள் சீர்குலைந்துள்ள நிலையிலும், தடையற்ற எரிவாயு விநியோகத்தை இந்தியா உறுதி செய்துள்ளது. எல்பிஜி விநியோகத்தில் எவ்விதத் தட்டுப்பாடும் ஏற்படாதவாறு அரசு விழிப்புடன் செயல்பட்டு வருவதால் இல்லத்தரசிகளும் நிம்மதியடைந்துள்ளனர். உலகளாவிய எரிபொருள் விலை ஏற்றத்திலிருந்து இந்திய மக்களைப் பாதுகாக்க அரசு தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதால், சர்வதேச நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இந்தியப் பொருளாதாரம் நிலையாகப் பயணித்து வருகிறது.