மருந்து கடைகளில் இனி CCTV? மத்திய அரசு புதிய பரிந்துரை!”
மருந்து கடைகளில் குறிப்பிட்ட மருந்துகளை விற்பனை செய்வதை கண்காணிக்கும் வகையில், அங்கு கண்காணிப்பு கேமராக்களை கட்டாயமாக்க மத்திய சுகாதார அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. இதற்கான வரைவு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.மருந்து விதிகள், 1945-ல் திருத்தம் மேற்கொள்ளும் வகையில் இந்த வரைவு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் சில கட்டுப்படுத்தப்பட்ட மருந்துகள் விற்பனை செய்யப்படுவதை தடுப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
Schedule H, H1 மற்றும் X ஆகிய பிரிவுகளில் இடம்பெறும் மருந்துகளின் விற்பனைக்கு ஏற்கனவே பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. இந்த மருந்துகள் உரிய மருத்துவ பரிந்துரை அடிப்படையில் மட்டுமே வழங்கப்படுவதை உறுதி செய்ய கூடுதல் கண்காணிப்பு நடவடிக்கையாக CCTV பரிந்துரைக்கப்பட்டுள்ளது.வரைவு விதிமுறையின்படி, மொத்த விற்பனையைத் தவிர்த்து, பதிவு செய்யப்பட்ட மருத்துவரின் பரிந்துரையின் அடிப்படையில் மருந்துகள் வழங்கப்படும் licensed premises-ல் CCTV கண்காணிப்பு அமைப்பு நிறுவப்பட்டு பராமரிக்கப்பட வேண்டும் என முன்மொழியப்பட்டுள்ளது.
முன்மொழியப்பட்ட விதிமுறையின்படி, CCTV பதிவுகள் குறைந்தது 3 மாதங்களுக்கு பாதுகாக்கப்பட வேண்டும். இதன் மூலம் மருந்து விற்பனை தொடர்பான நடவடிக்கைகளை பின்னர் ஆய்வு செய்யக்கூடிய பதிவாக வைத்திருக்க முடியும்.இந்த விதிமுறை தற்போது இறுதி செய்யப்பட்டு அமலுக்கு வந்துவிட்டதாக அர்த்தமில்லை. இது வரைவு அறிவிக்கை என்பதால், சம்பந்தப்பட்ட தரப்புகளிடம் கருத்துகள் கோரப்பட்டுள்ளன. கருத்துகள் மற்றும் பரிசீலனைக்குப் பிறகு இறுதி விதிமுறைகள் வெளியிடப்படும்.மருந்துகளை தவறாக பயன்படுத்துவதை கட்டுப்படுத்தவும், பரிந்துரை இல்லாமல் கட்டுப்படுத்தப்பட்ட மருந்துகள் விற்பனை செய்யப்படுவதை கண்காணிக்கவும் இந்த நடவடிக்கை முன்மொழியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.