ரயிலில் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை போன் சார்ஜிங் பாயிண்ட்டுகள் இயங்காது - வெளியானது புது உத்தரவு!
ரயில்களில் ஏற்படும் தீ விபத்து அசம்பாவிதங்களைத் தடுக்கும் பொருட்டு, இரவு நேரங்களில் மொபைல் சார்ஜிங் பாயிண்ட்டுகளைக் கட்டாயம் அணைத்து வைக்க வேண்டும் என்று ரயில்வே வாரியம் அனைத்து மண்டலங்களுக்கும் மீண்டும் கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
தென்கிழக்கு ரயில்வே மண்டலத்தில் இரவு நேரத்தில் சார்ஜிங் பாயிண்ட்டுகள் அணைக்கப்படாததால், பயணி ஒருவர் சார்ஜில் போட்டிருந்த 'பவர் பேங்க்' திடீரென வெடித்துச் சிதறியது. ரயில்களில் மின்சாரக் கசிவு மற்றும் ஓவர் ஹீட்டிங் காரணமாகத் தீ விபத்துகள் ஏற்படுவதைத் தடுக்க, இரவு நேரங்களில் சார்ஜிங் வசதியை நிறுத்த ரயில்வே வாரியம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. எனினும், இவ்விதிகள் முறையாகப் பின்பற்றப்படாததை அடுத்து தற்போது பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அனைத்துப் பயணிகள் மற்றும் அதிவேக ரயில்களிலும் இரவு 11:00 மணி முதல் அதிகாலை 5:00 மணி வரை மொபைல் மற்றும் லேப்டாப் சார்ஜிங் பாயிண்ட்டுகளுக்கான மின் விநியோகம் கட்டாயமாகத் துண்டிக்கப்பட வேண்டும். இதில் எந்தவொரு விதிவிலக்கும் அளிக்கப்படாது.
இந்த நடைமுறை தவறாமல் பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க அதிகாரிகளும் மேற்பார்வையாளர்களும் ரயில்களில் திடீர் ஆய்வுகளை மேற்கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேரப் பயணங்களின் போது மின்சார உபகரணங்கள் வெடிப்பதையும் தீ விபத்துகளையும் தவிர்க்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், பயணிகள் தங்களது மின்னணு சாதனங்களை இரவுக்கு முன்பாகவே சார்ஜ் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.