பிக்கப் வேன் மோதி கோர விபத்து; சம்பவ இடத்திலேயே 12 பேர் உயிரிழப்பு; தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்த பிரதமர் மோடி!
மத்திய பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் நிகழ்ந்த பயங்கர சாலை விபத்து 12 உயிர்களைப் பலிவாங்கியுள்ளது. தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக வந்த பிக்கப் வேன் ஒன்று, சிக்லியா சந்திப்பு அருகே எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நடுரோட்டில் தலைகீழாகக் கவிழ்ந்தது.
அப்போது அவ்வழியாக வந்த எஸ்.யூ.வி கார் மீது அந்த வேன் பயங்கரமாக மோதியதில், இரண்டு வாகனங்களும் அப்பளம் போல் நொறுங்கின. இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்தவர்கள் மற்றும் வேனில் இருந்த தொழிலாளர்கள் என மொத்தம் 12 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர்.
விபத்து குறித்துத் தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் மற்றும் மீட்புப் படையினர், இடிபாடுகளுக்குள் சிக்கிக் கிடந்தவர்களை மீட்டனர். இந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. விபத்து நடந்த பகுதியில் சிதறிக் கிடந்த உடல்களையும், காயமடைந்தவர்களின் அலறல் சத்தத்தையும் கண்ட அப்பகுதி மக்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இந்தத் துயரச் சம்பவத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ. 2 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்குத் தலா ரூ. 50,000-மும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்க அவர் உத்தரவிட்டுள்ளார்.
மத்திய பிரதேச மாநில அரசும் மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களில் அளவுக்கு அதிகமான நபர்களை ஏற்றுவதும், அதிவேகமுமே இத்தகைய விபத்துகளுக்குக் காரணம் எனப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர். உழைக்கச் சென்ற தொழிலாளர்கள் சடலமாகத் திரும்பிய இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.