நிலைகுலைந்த விமானி - நடுவானில் விமானத்திற்கு 300 அடி தொலைவில் நெருங்கிய பறக்கும் தட்டு!

 

இங்கிலாந்தில் பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்க முயன்றபோது, நடுவானில் 300 அடி தொலைவில் மர்மப் பொருள் (பறக்கும் தட்டு) ஒன்று மிக நெருக்கமாக வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லண்டனின் கேட்விக் விமான நிலையத்தில் தரையிறங்குவதற்காக 'ஏர்பஸ் ஏ319' பயணிகள் விமானம், சசெக்ஸ் கவுண்டி பகுதியின் ஹேங்கிராஸ் அருகே நடுவானில் பறந்து வந்து கொண்டிருந்தது. அப்போது தரையிறங்கச் சில நிமிடங்களே இருந்த நிலையில், திடீரென ஒரு மர்மப் பொருள் மேலே எழும்பி வந்தது. அது விமானத்தின் வலது இறக்கைப் பகுதியில், வெறும் 100 முதல் 300 அடி இடைவெளியில் விமானத்திற்கு மிக நெருக்கமாக வந்து கடந்து சென்றுள்ளது. தூரத்திலேயே அந்தப் பொருளைக் கவனித்த விமானி, சமயோசிதமாக விமானத்தின் திசையைச் சற்று மாற்றியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியதும், இச்சம்பவம் குறித்து உயரதிகாரிகளுக்கு விமானித் தகவல் அளித்தார். "எதிர் திசையில் விமானத்திற்கு இணையான மட்டத்தில் வந்த அந்த வட்ட வடிவிலான பொருள் ஒரு நவீன ட்ரோனாகவோ அல்லது பறக்கும் தட்டாகவோ இருக்கக்கூடும்" எனத் தெரிவித்துள்ளார். மேலும், அந்தப் பொருளின் வெளிப்புற விளிம்புகளில் கருப்பு நிற அடையாளங்கள் இருந்ததாகவும், அதன் சரியான வடிவம் மற்றும் அது எங்கிருந்து வந்தது என்ற விவரம் தெளிவாகத் தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இங்கிலாந்தின் 'ஏர்பிராக்ஸ்' அமைப்பு இதுகுறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.