undefined

நடுவானில் விழுந்து நொறுங்கிய விமானம்... விமானி உட்பட 7 பேர் பலி!

 

நடுவானில் நோயாளியுடன் சென்றுக் கொண்டிருந்த ஏர் ஆம்புலன்ஸ் விமானம் விழுந்து நொறுங்கியதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைநகர் ராஞ்சியில் இருந்து நோயாளி ஒருவரை, மேல் சிகிச்சைக்காக டெல்லிக்கு ஏற்றிச் சென்றுக் கொண்டிருந்த  ஏர் ஆம்புலன்ஸ் விமானம் ஒன்று, நேற்றிரவு சத்ரா மாவட்டக் காடுகளுக்குள் விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளானது.

<a style="border: 0px; overflow: hidden" href=https://youtube.com/embed/yhmwgZqEkgE?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/yhmwgZqEkgE/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" title="YouTube video player" width="560">

இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 7 பேரும் உயிரிழந்ததாக சத்ரா மாவட்ட ஆட்சியர் உறுதிப்படுத்தியுள்ளார். 'ரெட்பேர்ட் ஏர்வேஸ்' நிறுவனத்திற்குச் சொந்தமான 'பீச்ச்கிராஃப்ட் சி90' ரக விமானம் விபத்திற்குள்ளானது. ராஞ்சியில் உள்ள தேவ்கமல் மருத்துவமனையில் 63 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த சஞ்சய் குமார் (41) என்ற நோயாளியை மேல் சிகிச்சைக்காக டெல்லிக்கு அழைத்துச் செல்ல இந்த விமானம் பயன்படுத்தப்பட்டது.

நேற்று இரவு 7.11 மணிக்கு ராஞ்சி விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்த விமானம், சுமார் 7.34 மணியளவில் கொல்கத்தா வான்வழி கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. வாரணாசிக்கு தென்கிழக்கே 100 கடல் மைல் தொலைவில் இருந்தபோது இந்தத் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

இந்த கோர விபத்தில் சஞ்சய் குமார் (நோயாளி), டாக்டர் விகாஸ் குமார் குப்தா (மருத்துவர்), சச்சின் குமார் மிஸ்ரா (துணை மருத்துவப் பணியாளர்), அர்ச்சனா தேவி (உதவியாளர்), துரு குமார் (உதவியாளர்), கேப்டன் விவேக் விகாஸ் பகத் (விமானி), கேப்டன் சவ்ராஜ்தீப் சிங் (துணை விமானி) என விமானத்தில் பயணம் செய்த 7 பேரும் பலியாகி உள்ளனர்.

சத்ரா மாவட்டத்தின் சிமரியா காவல் எல்லைக்குட்பட்ட கசாரியா ஊராட்சிப் பகுதியில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் விமானத்தின் சிதறல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. விபத்தின் போது அந்தப் பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. மோசமான வானிலை காரணமாகப் பாதையை மாற்ற விமானிகள் அனுமதி கேட்ட சிறிது நேரத்திலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்து குறித்து விசாரணை நடத்த 'விமான விபத்து விசாரணை வாரியம்' (AAIB) மற்றும் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) உத்தரவிட்டுள்ளன. மீட்புக் குழுவினர் சடலங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.