விமானம் கடலில் விழுந்து விபத்து - 6 பேர் உயிரிழப்பு - வட அட்லாண்டிக் கடல் பகுதியில் உடல்களைத் தேடும் பணி தீவிரம்!
பெர்முடா தீவில் இருந்து அமெரிக்காவின் பாஸ்டன் நகருக்கு ஏர் ஆம்புலன்சாகச் சென்ற சிறிய ரக விமானம் நடுவானில் கட்டுப்பாட்டை இழந்து கடலில் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 6 பேரும் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வட அட்லாண்டிக் கடலில் உள்ள பெர்முடா தீவில் இருந்து கல்ப்ஸ்டிரீம் ஜி 100 சிறிய ரக ஏர் ஆம்புலன்ஸ் விமானம் அமெரிக்காவின் பாஸ்டன் நகரை நோக்கிப் புறப்பட்டுச் சென்றது. பயணம் நடுவானில் இருந்தபோது, திடீரென விமானம் கட்டுப்பாட்டை இழந்து நடுவானில் மாயமானது. தொடர்ந்து அது கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது கண்டறியப்பட்டது.
இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 6 பேரும் உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது. விமானம் கடலில் விபத்துக்குள்ளானதால் உடல்களை உடனடியாக மீட்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது; தற்போது கடலில் மூழ்கியவர்களின் உடல்களைத் தேடும் மற்றும் மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.