அமெரிக்காவில் நடுவானில் 2 போர் விமானங்கள் மோதி விபத்து... பகீர் வீடியோ!

 

அமெரிக்காவின் இடாஹோ மாகாணம் எல்மொர் நகரில் உள்ள மவுண்டன் ஹோம் விமானப்படை தளத்தில் நேற்று போர் விமானங்களின் சாகசக் கண்காட்சி விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த வான்வழி சாகச நிகழ்ச்சியைக் காண்பதற்காக மைதானத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டிருந்தனர். அப்போது வான்வெளியில் அதிவேகமாகப் பறந்து சாகசங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கடற்படைக்குச் சொந்தமான இஏ-18ஜி குரோலர் ரக 2 போர் விமானங்கள் எதிர்பாராத விதமாக நடுவானில் ஒன்றோடு ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.

விபத்துக்குள்ளான 2 போர் விமானங்களும் தரைமட்டமாகி முற்றிலும் எரிந்து சாம்பலாகின. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புக் குழுவினர், விபத்தால் ஏற்பட்ட தீயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் பொதுமக்களுக்கோ அல்லது விமானப்படை ஊழியர்களுக்கோ எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை.