புலி தாக்கி தோட்டத் தொழிலாளி உயிரிழப்பு - உடலைக் காட்டாததால் பொதுமக்கள் மறியல்!

 

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே வனவிலங்கு தாக்கி தோட்டத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில், உடலை உறவினர்களிடம் காட்டாமல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பியதாகக் கூறி பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கூடலூர் அருகே உள்ள ஓவேலி பேரூராட்சி 4-ம் கேட் பகுதியைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளி பாலு (எ) பாலகிருஷ்ணன் (58) என்பவர் வெளியே சென்ற நிலையில், வீடு திரும்பவில்லை.

உறவினர்கள் வனத்துறைக்குத் தகவல் தெரிவித்துத் தேடும் பணியில் ஈடுபட்டபோது, வனவிலங்கு (புலி) தாக்கியதில் பாலகிருஷ்ணன் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், பாலகிருஷ்ணனின் உடலை மீட்டுப் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால், உடலை உறவினர்களிடம் காட்டாமல் அவசர அவசரமாகக் கொண்டு சென்றதாகக் கூறி, காவல் மற்றும் வனத்துறையினருடன் உறவினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கூடலூர் பகுதியில் வனவிலங்குகள் தாக்குதலால் மனித உயிரிழப்புகள் அதிகரித்து வருவதைக் கண்டித்தும், மனித-வனவிலங்கு மோதலைத் தடுக்க வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டியும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். செய்தி அறிந்து வந்த வனத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திச் சமரசம் செய்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

சம்பவம் நடந்த ஓவேலி பகுதியில் அசம்பாவிதங்களைத் தடுக்க கூடுதல் வனப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், தாக்குதல் நடத்திய வனவிலங்கைக் கண்டறியக் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் டிரோன் (Drone) கேமராக்கள் மூலம் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.