நோட் பண்ணிக்கோங்க... பல்லவன், வைகை எக்ஸ்பிரஸ் ரயில்களின் நேரத்தில் மாற்றம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

 

ரயில் பாதைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்புப் பணிகள் காரணமாகச் சென்னை எழும்பூரில் இருந்து இயக்கப்படும் முக்கிய விரைவு ரயில்களான பல்லவன் மற்றும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில்களின் புறப்படும் மற்றும் சென்றடையும் நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெற்கு ரயில்வே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சென்னை எழும்பூர் - காரைக்குடி இடையே இயக்கப்படும் பல்லவன் விரைவு ரயிலின் அட்டவணையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி,  சென்னை எழும்பூர் - காரைக்குடி (வண்டி எண்: 12605): வருகிற நவம்பர் 17-ஆம் தேதி 1 மணி நேரம் தாமதமாக மாலை 4.40 மணிக்குத் புறப்படும். வருகிற நவம்பர் 24-ஆம் தேதி 40 நிமிடங்கள் தாமதமாக மாலை 4.20 மணிக்குத் புறப்படும்.

காரைக்குடி - சென்னை எழும்பூர் (வண்டி எண்: 12606): மறுமார்க்கமாக காரைக்குடியில் இருந்து புறப்படும் ரயில், நவம்பர் 26 மற்றும் டிசம்பர் 1 ஆகிய தேதிகளில் 35 நிமிடங்கள் தாமதமாகச் சென்னை எழும்பூரை வந்தடையும்.

வைகை எக்ஸ்பிரஸ் ரயில் நேர மாற்றம்: சென்னை எழும்பூர் - மதுரை இடையே இயக்கப்படும் வைகை விரைவு ரயிலின் அட்டவணையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களின்படி சென்னை எழும்பூர் - மதுரை (வண்டி எண்: 12635) வருகிற நவம்பர் 26-ஆம் தேதி 30 நிமிடங்கள் தாமதமாக மதியம் 1.45 மணிக்குத் புறப்படும். வருகிற டிசம்பர் 1-ஆம் தேதி 45 நிமிடங்கள் தாமதமாக மதியம் 2.00 மணிக்குத் புறப்படும்.

மதுரை - சென்னை எழும்பூர் (வண்டி எண்: 12636): மறுமார்க்கமாக மதுரையில் இருந்து சென்னை எழும்பூர் வரும் ரயில், நவம்பர் 17-ஆம் தேதி 1 மணி நேரம் 10 நிமிடங்கள் தாமதமாகவும், நவம்பர் 24-ஆம் தேதி 40 நிமிடங்கள் தாமதமாகவும் இயக்கப்பட்டு எழும்பூரை வந்தடையும்.

ரயில் பயணிகள் அனைவரும் தெற்கு ரயில்வேயின் இந்த நேர மாற்றத்தைக் கவனத்தில் கொண்டு தங்களது பயணங்களைத் திட்டமிட்டுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.