விவசாயிகளுக்கும் ரூ.6,000 உதவித்தொகை...  பயன்பெற இத மட்டும் செய்ங்க! 

 

மத்திய அரசின் மிக முக்கியமான திட்டமான ‘பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி’ (PM-KISAN) திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை ஆண்கள் மட்டுமே அதிக அளவில் பயனடைந்து வந்த நிலையில், தற்போது சாகுபடி நிலம் பெண் விவசாயிகளின் பெயரில் இருந்தாலும் அவர்களும் இந்த 6,000 ரூபாய் நிதியுதவியைப் பெற முழு தகுதியுடையவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பெண் விவசாயிகளின் பொருளாதாரச் சுதந்திரத்தை உறுதி செய்வதோடு, விவசாயத்தில் அவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற விரும்பும் பெண் விவசாயிகள், சாகுபடி செய்யக்கூடிய நிலத்தைத் தங்களது பெயரில் வைத்திருக்க வேண்டியது கட்டாயமாகும். ஆண்டுக்கு மூன்று தவணைகளாகத் தலா 2,000 ரூபாய் வீதம், இந்தத் தொகை நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இத்திட்டத்தில் இணைய ஆதார் அட்டை, நில ஆவணங்கள் மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் ஆகியவை அவசியமானவையாகும். மேலும், பிஎம் கிசான் இணையதளத்தில் முறையாகப் பதிவு செய்து இ-கேஒய்சி (e-KYC) பணிகளை முடித்திருப்பது அவசியமாகும்.

அதே சமயம், வருமான வரி செலுத்துபவர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்கள் போன்ற சில குறிப்பிட்ட பிரிவினருக்கு இந்தத் திட்டத்தில் பயன்பெற விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தகுதியுள்ள பெண் விவசாயிகள் எவ்விதத் தடையுமின்றி இந்த வாய்ப்பைப் பயன்படுத்தித் தங்களது விவசாயச் செலவுகளுக்குத் தேவையான நிதி ஆதாரத்தைப் பெற முடியும். கிராமப்புறப் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள இந்தத் திட்டம், தற்போது பெண் விவசாயிகளையும் அதிக அளவில் உள்ளடக்கி விரிவுபடுத்தப்பட்டுள்ளது.