undefined

பிரதமர் மோடி மதுரை வருகை.. அனல் பறக்க தேர்தல் பிரச்சாரம் - திருப்பரங்குன்றத்தில் சுவாமி தரிசனம்!

 

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பரப்புரையைத் தீவிரப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி மார்ச் 1ம் தேதி மதுரையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்ற உள்ளார். பிப்ரவரி 28-ம் தேதி இரவு சென்னை வரும் பிரதமர், அன்றைய தினம் ஆளுநர் மாளிகையில் தங்குகிறார்.

மார்ச் 1 காலை சென்னையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி செல்லும் அவர், அங்கு நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறார். அன்று மதியம்  புதுச்சேரியிலிருந்து மதுரை செல்லும் பிரதமர் மோடி, அறுபடை வீடுகளில் ஒன்றான வரலாற்றுச் சிறப்புமிக்க திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்கிறார். பின்னர் மாலை மதுரையில் நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரம்மாண்ட தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார்.

சமீபத்தில் திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பாக எழுந்த சர்ச்சைகளுக்குப் பிறகு பிரதமரின் இந்த வருகை முக்கியத்துவம் பெறுகிறது. இது தென் மாவட்டங்களில் பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க கூட்டணியின் வாக்கு வங்கியை உறுதிப்படுத்தும் ஒரு முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுப் பிரதமர் அடிக்கடி தமிழகம் வருவது எதிர்க்கட்சிகளிடையே விவாதத்தை உருவாக்கியுள்ள நிலையில், "தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் கலாச்சாரத்திற்குத் தேசிய ஜனநாயகக் கூட்டணி முக்கியத்துவம் அளிக்கிறது" என்ற செய்தியைப் பதிவு செய்யப் பாஜக திட்டமிட்டுள்ளது.

பிரதமரின் வருகையையொட்டி மதுரையில் ஐந்தடுக்கு பாதுகாப்புப் போடப்பட்டுள்ளதுடன், லட்சக்கணக்கான தொண்டர்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் நகரின் முக்கியப் பகுதிகளில் போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன.