சாஷ்டாங்கமாக விழுந்து மேற்கு வங்க மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி!
மேற்கு வங்க அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் இன்று எழுதப்பட்டுள்ளது. கொல்கத்தா பிரிகேட் மைதானத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், அம்மாநிலத்தின் முதல் பாஜக முதலமைச்சராகச் சுவேந்து அதிகாரி பதவியேற்றுக்கொண்டார். இந்த விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடியின் செயல் அங்கிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
பதவியேற்பு விழாவில் உரையாற்ற மேடை ஏறிய பிரதமர் நரேந்திர மோடி, திடீரென மேடையிலேயே மண்டியிட்டு, மேற்கு வங்க மண்ணைத் தொட்டு வணங்கி, அங்கு கூடியிருந்த மக்களை நோக்கிச் சாஷ்டாங்கமாக விழுந்து தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். 15 ஆண்டுகாலத் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி, பாஜகவிற்குப் பெரும்பான்மை வழங்கிய வங்க மக்களுக்குத் தனது உயரிய மரியாதையை அவர் இதன் மூலம் வெளிப்படுத்தினார்.
"இது வெறும் ஆட்சி மாற்றம் அல்ல, இது வங்காளத்தின் மறுமலர்ச்சி" எனப் பிரதமர் தனது உரையில் குறிப்பிட்டார். ஆளுநர் ஆர்.என். ரவி, சுவேந்து அதிகாரிக்கு முதலமைச்சராகப் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். இந்த விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் மற்றும் பல்வேறு மாநில பாஜக முதலமைச்சர்கள் கலந்துக் கொண்டனர். மேற்கு வங்கத்தில் முதன்முறையாகத் தாமரை மலர்ந்துள்ளதைக் கொண்டாடும் வகையில் கொல்கத்தா மாநகரம் முழுவதும் காவி மயமாகக் காட்சியளித்தது.
பிரதமர் மோடி சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கியபோது, மைதானத்தில் திரண்டிருந்த மக்கள் "பாரத் மாதா கீ ஜே" என முழக்கமிட்டுத் தங்களது வரவேற்பைத் தெரிவித்தனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.