சென்னையில் அக்டோபர் 11-ல் பிரதமர் மோடி ரோடு ஷோ! சைதாப்பேட்டை முதல் ஐஐடி வரை பரபரப்பு!
சென்னையில் அக்டோபர் 11-ல் பிரதமர் மோடி ரோடு ஷோ! சைதாப்பேட்டை முதல் ஐஐடி வரை பரபரப்பு
பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 11-ம் தேதி சென்னை வர உள்ள நிலையில், அவரது பயணத்தையொட்டி சென்னையில் ரோடு ஷோ மற்றும் வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.சென்னை வரும் பிரதமர் மோடி, பூந்தமல்லி–வடபழனி இடையிலான மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைக்க உள்ளார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு பூந்தமல்லியில் இருந்து போரூர் வரை மெட்ரோ ரெயிலில் அவர் பயணம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து போரூரில் இருந்து கார் மூலம் சென்னை ஐஐடி வளாகத்துக்கு பிரதமர் மோடி செல்ல உள்ளார். இந்த பயணத்தின்போது சாலை வழியாக செல்லும் பகுதிகளில் வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
குறிப்பாக சைதாப்பேட்டை சின்னமலை பகுதியில் இருந்து கவர்னர் மாளிகை வழியாக சென்னை ஐஐடி வரையிலான சுமார் 1.5 கிலோமீட்டர் தூரத்தில் இருபுறமும் வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.பிரதமர் மோடியின் சென்னை பயணத்தையொட்டி பாஜக சார்பிலும் பல்வேறு வரவேற்பு ஏற்பாடுகள் திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சென்னை ஐஐடி வளாகத்தில் பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் நிறுவனர்களுடன் கலந்துரையாடல், ஐஐடி மெட்ராஸ் வளாகத்தில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில் தரிசனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் அவரது பயணத் திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.
மேலும், ஐஐடி மெட்ராஸ் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இளையராஜா இசை கற்றல் மற்றும் ஆராய்ச்சி மையத்தையும் பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அக்டோபர் 11-ம் தேதி பிரதமர் மோடியின் சென்னை வருகையையொட்டி மெட்ரோ தொடக்க விழா மட்டுமின்றி, நகரின் முக்கிய சாலைகளிலும் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் கவனம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.