undefined

சென்னை கடற்கரை - எழும்பூர் 4-வது ரயில் பாதை - பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிப்பு!

 

தமிழகத்தில் ரயில்வே உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், ரூ.378 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களைப் பிரதமர் நரேந்திர மோடி மதுரையில் நடைபெற்ற விழாவில் தொடங்கி வைத்தார். இதில் சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் முக்கியத் திட்டமான கடற்கரை - எழும்பூர் 4-வது ரயில் பாதையும் அடங்கும்.  சென்னையின் முக்கிய ரயில் நிலையங்களான கடற்கரை மற்றும் எழும்பூரை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்ட புதிய 4-வது ரயில் பாதை, பயணிகளின் நீண்டகால எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்துள்ளது.

இத்திட்டம் சுமார் ரூ.273 கோடி செலவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 4.3 கி.மீ. நீளம் கொண்ட இந்தப் புதிய பாதை, கடற்கரை மற்றும் எழும்பூர் நிலையங்களுக்கு இடையே கூடுதல் ரயில்களை இயக்க வழிவகுக்கும். இந்தப் புதிய பாதையின் மூலம் எழும்பூரில் இருந்து தாம்பரம் செல்லும் புறநகர் ரயில்கள் மற்றும் தொலைதூர விரைவு ரயில்களின் போக்குவரத்து நெரிசல் குறையும். மேலும், சரக்கு ரயில் சேவைகளைத் தடையின்றி வழங்கவும் இது உதவும்.

ரயில்வே துறையில் ரூ.105 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட பொம்மிடி,  காரைக்குடி, மணப்பாறை, மொரப்பூர், பொள்ளாச்சி, சோழவந்தான், ஸ்ரீவில்லிபுத்தூர், திருவாரூர் ஆகிய 8 முக்கிய ரயில் நிலையங்களைப் பிரதமர் திறந்து வைத்தார்.  அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் இந்த நிலையங்களில்  நவீன நடைமேடைகள் மற்றும் காத்திருப்போர் அறைகள், மின்தூக்கி மற்றும் நகரும் படிக்கட்டுகள், மேம்படுத்தப்பட்ட கழிவறை மற்றும் பார்க்கிங் வசதிகள், பயணிகளுக்கான டிஜிட்டல் தகவல் அறிவிப்பு அமைப்புகள் போன்ற நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பொம்மிடி ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய ரயில்வே மற்றும் ஜல் சக்தித் துறை இணையமைச்சர் வி. சோமண்ணா மற்றும் மூத்த ரயில்வே அதிகாரிகள் கலந்து கொண்டனர். மதுரையில் நடைபெற்ற அரசு விழாவில் பிரதமர் மோடி காணொளி காட்சி வாயிலாக இந்தத் திட்டங்களை முறைப்படி தொடங்கி வைத்தார்.