"யோகா கலையை உலகெங்கும் கொண்டு சேர்த்தவர் பிரதமர் மோடி!" - ஹெச்.ராஜா புகழாரம்!
12-ஆவது சர்வதேச யோகா தினம் இன்று நாடு முழுவதும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வரும் வேளையில், யோகா கலையை உலக அரங்கிற்கு எடுத்துச் சென்ற பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் பங்களிப்பைப் போற்றிப் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா தனது மனமார்ந்த வாழ்த்துகளையும், வணக்கங்களையும் தெரிவித்துள்ளார்.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துப் பதிவில், நமது பாரதப் புண்ணிய பூமியில் வாழ்ந்த உன்னத சித்தரான பதஞ்சலி மகரிஷி மனித குலத்திற்கு அருளிச் சென்ற உன்னதமான கலை தான் யோகாசனம். உடலையும் மனதையும் ஒருமுகப்படுத்தும் இந்தத் தொன்மையான கலை, நமது நாட்டின் மிக முக்கியப் பாரம்பரிய அடையாளமாகும்.
இந்த அரிய யோகா கலையின் முக்கியத்துவத்தை ஐக்கிய நாடுகள் சபை வரை கொண்டு சென்று, ஜூன் 21-ஆம் தேதியைச் சர்வதேச யோகா தினமாக உலக நாடுகள் அனைத்தும் அங்கீகரித்துக் கொண்டாடும் நிலையை உருவாக்கியவர் பிரதமர் நரேந்திர மோடி.
நமது நாட்டின் பாரம்பரியக் கலையை உலகெங்கும் கொண்டு சேர்த்து, அதன் மூலம் உலக அரங்கில் பாரத தேசத்திற்குத் தனிப்பெரும் பெருமையையும் கீர்த்தியையும் தேடித் தந்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு, இந்தச் சர்வதேச யோகா நன்ன நாளில் தனது மனமார்ந்த வாழ்த்துகளையும், வணக்கங்களையும் சமர்ப்பிப்பதாக ஹெச்.ராஜா தனது பதிவில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.