பிரதமர் மோடிக்கு இந்தோனேசியாவின் மிக உயரிய 'பிந்தாங் அதிபூர்ணா' விருது!

 

மூன்று நாடுகள் அரசுமுறைப் பயணத்தின் முதல்கட்டமாக இந்தோனேசியா சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்நாட்டின் மிக உயரிய குடிமை மற்றும் ராணுவ விருதான 'பிந்தாங் அதிபூர்ணா' பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.   

தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள 'இஸ்தானா மெர்டேகா' அதிபர் மாளிகைக்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு, ராணுவ மரியாதையுடன் கூடிய பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.   அங்கு நடைபெற்ற நெகிழ்ச்சியான விழாவில், இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியான்டோ இந்த உயரிய விருதை பிரதமர் மோடிக்கு அணிவித்துச் சிறப்பித்தார்.  

இந்தியா - இந்தோனேசியா இடையேயான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதிலும், இருநாட்டு மக்களின் ஒற்றுமை மற்றும் வளர்ச்சிக்கு ஆற்றிய அசாதாரணப் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாகவும் இந்த விருது பிரதமருக்கு வழங்கப்பட்டுள்ளது. 1959ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட இந்த விருது, அந்நாட்டின் மிக உயரிய கௌரவமாகக் கருதப்படுகிறது.  

முன்னதாக, ஜகார்த்தா விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை அதிபர் பிரபோவோ சுபியான்டோ நேரில் சென்று வரவேற்றார். அத்துடன் அங்கு திரண்டிருந்த ஏராளமான இந்திய வம்சாவளியினர், தேசியக் கொடியை ஏந்தி பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த அன்பான வரவேற்பிற்குப் பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துள்ளார்.  

விருது வழங்கும் நிகழ்வைத் தொடர்ந்து, இருநாட்டுத் தலைவர்களும் பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கியத் துறைகள் குறித்து விரிவான இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்தினர்.  

இருநாடுகளின் இந்த மூலோபாயக் கூட்டாண்மையை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் சுகாதாரம், தொழில்நுட்பம், பிராந்தியப் பாதுகாப்பு, கல்வி, பிரமோஸ் ஏவுகணை விற்பனை மற்றும் முக்கியமான கனிம விநியோகத்தில் முதலீடு உள்ளிட்ட 8 முக்கிய ஒப்பந்தங்கள் இந்தச் சந்திப்பின் போது கையெழுத்தாகின.  

கடந்த 2025ஆம் ஆண்டு இந்தியாவின் குடியரசு தின விழாவில் இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியான்டோ முதன்மை விருந்தினராகப் பங்கேற்றிருந்த நிலையில், தற்போதைய பிரதமரின் இந்த இந்தோனேசியப் பயணம் இருநாட்டு நட்புறவில் புதியதொரு மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. இந்தோனேசியாவின் இந்த கௌரவத்தையும் சேர்த்து, பிரதமர் மோடி சர்வதேச அரங்கில் பெற்றுள்ள உயரிய சர்வதேச விருதுகளின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.