undefined

மதுரையில் பிரதமர் மோடி... ₹4,400 கோடி திட்டங்கள் தொடங்கி வைப்பு..  பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்பு!

 

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், மதுரைக்கு வருகை தந்துள்ள பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, சுமார் ₹4,400 கோடி மதிப்பிலான பல்வேறு முக்கிய உள்கட்டமைப்பு மற்றும் மக்கள் நலத் திட்டங்களைத் தொடங்கி வைத்து தமிழகத்திற்குப் புதிய வளர்ச்சித் திட்டங்களை அர்ப்பணித்துள்ளார்.

புதுச்சேரி பயணத்தை முடித்துவிட்டு மதுரை வந்தடைந்த பிரதமர் மோடி, விமான நிலையம் அருகே நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டார். இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அமைச்சர் எ.வ.வேலு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்றனர்.

பிரதமர் மோடி இன்று  மரக்காணம் - புதுச்சேரி மற்றும் பரமக்குடி - ராமநாதபுரம் இடையேயான 4 வழிச்சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். சென்னை கடற்கரை - எழும்பூர் இடையேயான 4-வது ரயில் பாதையை நாட்டுக்கு அர்ப்பணித்தார். 'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ் மறுசீரமைக்கப்பட்ட காரைக்குடி, மொரப்பூர், ஸ்ரீவில்லிபுத்தூர், பொள்ளாச்சி, சோழவந்தான் உள்ளிட்ட 8 முக்கிய ரயில் நிலையங்களைப் பிரதமர் திறந்து வைத்தார். தமிழகத்தின் முக்கியச் சுற்றுலா மற்றும் ஆன்மீகத் தலங்களான கும்பகோணம், வேலூர், ஏற்காடு ஆகிய இடங்களில் புதிய 'ஆகாஷ்வாணி' பண்பலை சேவைகளைத் தொடங்கி வைத்தார்.

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் ஏப்ரல் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், பிரதமரின் இந்த வருகை மிக முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. அரசு விழாவைத் தொடர்ந்து, அவர் மதுரை மண்டேலா நகரில் நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரம்மாண்டப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.

பிரதமரின் வருகையை முன்னிட்டு மதுரை மாநகரம் முழுவதும் ஐந்தடுக்கு பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. அரசு விழாவை முடித்துக்கொண்ட பிரதமர், அடுத்ததாகத் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளார்.