நாளை ரூ.18,880 கோடியை வழங்குகிறார் பிரதமர் மோடி - பிஎம் கிசான் தவணைப் பணம் விடுவிப்பு!

 

மத்திய அரசின் மிக முக்கிய விவசாய வருமான உதவித் திட்டமான 'பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி' (பிஎம் கிசான்) திட்டத்தின் கீழ், தகுதிவாய்ந்த விவசாயிகளுக்கான 23-வது தவணைத் தொகை நாளை வெளியிடப்படுகிறது.

மேற்கு வங்காள மாநிலத்திலிருந்து பிரதமர் நரேந்திர மோடி இத்திட்டத்தை நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்க உள்ளதாக மத்திய வேளாண்மை மற்றும் விவசாய நலத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், மேற்கு வங்காள மாநிலத்தின் ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள வரலாற்றுப் புகழ்பெற்ற தாரகேஸ்வர் நகரில் நாளை பிற்பகல் 3:45 மணிக்கு 'பிஎம் கிசான் திருவிழா' என்ற பிரம்மாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் முதன்மை விருந்தினராகப் பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடி, கணினிப் பொத்தானை அழுத்தி நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்குப் பணத்தை நேரடியாக அள்ளி வழங்குகிறார்.

நாளை ஒரே நாளில் நாடு முழுவதும் உள்ள தகுதியுள்ள விவசாயிகளின் கணக்குகளுக்கு மொத்தம் ரூ.18,880 கோடி நிதி பகிர்ந்தளிக்கப்படுகிறது. இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள 9.44 கோடிக்கும் அதிகமான தகுதிவாய்ந்த விவசாயக் குடும்பங்கள் தங்களது 23-வது தவணையான ரூ.2,000 தொகையை நேரடியாகப் பெறுகின்றனர். இதில் குறிப்பாக 2.18 கோடிக்கும் அதிகமான பெண் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு இந்த நிதி நேரடியாகச் சென்றடைகிறது.

நடப்புத் தவணையில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 45.35 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் பயன்பெறுகின்றனர். அவர்களுக்கு மட்டும் சுமார் ரூ.907.21 கோடி நிதி நாளை நேரடியாக வழங்கப்படவுள்ளது. 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி தொடங்கப்பட்ட இத்திட்டம், உலகிலேயே மிகப்பெரிய நேரடி வருமான ஆதரவுத் திட்டங்களில் ஒன்றாகத் தொடர்ந்து நீடித்து வருகிறது.