பிரதமர் மோடி தமிழக வருகை - சென்னையில் ட்ரோன்கள் பறக்கத் தடை; 'சிவப்பு மண்டலமாக' அறிவிப்பு!
பிரதமர் மோடி வரும் பிப்ரவரி 28 மற்றும் மார்ச் 1 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். இதையொட்டி சென்னை காவல்துறை சிறப்புப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பிப்ரவரி 28-ம் தேதி இரவு தனி விமானம் மூலம் சென்னை வரும் பிரதமர் மோடி, அன்றைய தினம் இரவு கிண்டி ஆளுநர் மாளிகையில் தங்குகிறார்.
பிரதமர் தங்கும் ஆளுநர் மாளிகை அமைந்துள்ள கிண்டி மற்றும் அவர் வந்து இறங்கும் மீனம்பாக்கம் விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் 'சிவப்பு மண்டலமாக' அறிவிக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த பகுதிகளில் ட்ரோன்கள் அல்லது இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்திலிருந்து ஆளுநர் மாளிகைக்குப் பிரதமர் செல்லும் வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மார்ச் 1-ம் தேதி காலை சென்னையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி செல்லும் பிரதமர், அங்கு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அதனைத் தொடர்ந்து, அன்று மதியம் மதுரை செல்லும் அவர், அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். மேலும், திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கும் சென்று சாமி தரிசனம் செய்யத் திட்டமிட்டுள்ளார். பிரதமரின் இந்தப் பயணத்தையொட்டி சென்னை, புதுச்சேரி மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் ஐந்தடுக்கு பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.