மேற்கு வங்காளத்திற்கு பிரதமர் மோடியின் ‘6 கியாரண்டி’: 7-வது ஊதிய குழு அமல்; ஊடுருவல்காரர்களுக்கு நோ - ஹல்தியாவில் அதிரடி முழக்கம்!

 

மேற்கு வங்காளத்தில் ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகச் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி பா.ஜ.க-வுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்ய இன்று ஹல்தியா வந்த பிரதமர் மோடி, திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் நிகழ்ந்த ஊழல்களையும், அராஜகங்களையும் சுட்டிக்காட்டி 6 முக்கிய வாக்குறுதிகளை வழங்கினார்.

மாநிலத்தில் நிலவும் வன்முறை மற்றும் அச்சச் சூழலை பா.ஜ.க அரசு முழுமையாக நீக்கும். சட்டத்தின் ஆட்சி மீதான மக்களின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுப்போம். பொதுமக்களின் குறைகளுக்கு உடனடித் தீர்வு காணும் வகையிலும், மக்களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்ட பொறுப்பான நிர்வாகமாகவும் பா.ஜ.க அரசு செயல்படும்.

திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஒவ்வொரு பணமோசடி, ஊழல் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், பாலியல் வன்கொடுமை வழக்குகள் அனைத்தும் மீண்டும் பாரபட்சமின்றி விசாரிக்கப்படும். ஊழலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் (அமைச்சர் முதல் கடைநிலை ஊழியர் வரை) தப்ப முடியாது; அவர்கள் அனைவரும் சட்டப்படி சிறையில் அடைக்கப்படுவார்கள்.

அரசியல் சாசனத்தின்படி அகதிகளுக்கு அனைத்து உரிமைகளும், சலுகைகளும் வழங்கப்படும். அதேசமயம், சட்டவிரோதமாக ஊடுருவியவர்கள் கண்டறியப்பட்டு வெளியேற்றப்படுவார்கள். மாநில அரசு ஊழியர்களின் நீண்டகால கோரிக்கையான 7-வது ஊதிய குழு பரிந்துரைகள், பா.ஜ.க ஆட்சி அமைந்தவுடன் உடனடியாக அமல்படுத்தப்படும்.

"திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. சட்டத்தின் பிடியில் இருந்து ஒரு குண்டர் கூட தப்ப முடியாது" என்று பிரதமர் மோடி தனது உரையில் ஆவேசமாகத் தெரிவித்தார். மாநிலத்தின் தொழில் வளர்ச்சி மற்றும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உறுதி செய்ய பா.ஜ.க-வை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.