பிரதமர் மோடியின் சென்னை ரோடு ஷோ திடீர் ரத்து... பாஜக வேட்பாளர் தேர்வில் நீடிக்கும் இழுபறி காரணமா?!
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்காக இன்று சென்னை வரவிருந்த பிரதமர் நரேந்திர மோடியின் முக்கியப் பிரசாரத் திட்டங்கள் கடைசி நிமிடத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளன. வேட்பாளர் பட்டியலில் ஏற்பட்டுள்ள குழப்பம் மற்றும் தாமதமே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
இன்று மதியம் சென்னை வரும் பிரதமர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி செல்கிறார். மாலை 3 மணியளவில் அஜந்தா சிக்னல் முதல் அண்ணா சதுக்கம் வரை 2 கி.மீ தொலைவிற்குத் திட்டமிட்டபடி ரோடுஷோ நடத்தி, கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார். புதுச்சேரி நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு இன்று இரவு சென்னை திரும்பும் பிரதமர், தனியார் ஹோட்டலில் தங்கி ஓய்வெடுக்கிறார்.
சென்னையில் தங்கியிருக்கும் போது மயிலாப்பூர் தொகுதியில் பிரம்மாண்ட ரோடுஷோ மற்றும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் பங்கேற்கத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால்: பாஜக வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதில் இன்னும் இழுபறி நீடிக்கிறது. வேட்பாளரே இல்லாத தொகுதியில் பிரசாரம் செய்வது சரியாக இருக்காது என்பதால் ரோடுஷோ ரத்து செய்யப்பட்டுள்ளது.
வேட்பாளர் தேர்வில் நிலவும் குழப்பம் மற்றும் ஒருங்கிணைப்பு இல்லாமை காரணமாகத் தமிழக பாஜக தலைமை மீது பிரதமர் கடும் அதிருப்தியில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாளை ஏப்ரல் 4ம் தேதி மயிலாப்பூர் பிரசாரத்திற்குப் பதிலாக, தமிழக பாஜக முக்கிய நிர்வாகிகளுடன் தேர்தல் பணிகள் குறித்து மட்டும் பிரதமர் அவசர ஆலோசனை நடத்தவுள்ளார்.
வேட்புமனுத் தாக்கலுக்கு இன்னும் சில நாட்களே (ஏப்ரல் 6 கடைசி நாள்) உள்ள நிலையில், வேட்பாளர்களை அறிவிக்காதது தொண்டர்களிடையே சோர்வை ஏற்படுத்தியுள்ளது. இதனால், தேர்தல் முடிந்த பிறகு தமிழக பாஜகவின் உயர்மட்டப் பொறுப்புகளில் அதிரடியான மாற்றங்களைச் செய்யப் பிரதமர் முடிவு செய்துள்ளதாகத் தில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் தரப்பில் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இன்னும் தமிழகம் வராத நிலையில், பிரதமரின் இந்தத் திடீர் ரத்து செய்தியால் திமுக கூட்டணி சற்று நிம்மதியடைந்துள்ளது. அதேசமயம், வேட்பாளர் இல்லாமல் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் செய்து வரும் நிலையில், பாஜகவின் இந்த உள்நாட்டுப் பூசல் தேர்தல் களத்தை இன்னும் சூடாக்கியுள்ளது.