'பி.எம். சூர்ய கர்' திட்டம் - 50 லட்சம் வீடுகளில் சோலார் பேனல் பொருத்தி மத்திய அரசு சாதனை!
மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் ‘பி.எம். சூர்ய கர்: முப்த் பிஜிலி யோஜனா’ திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 50 லட்சத்திற்கும் அதிகமான வீடுகளில் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
இத்திட்டம் தொடங்கப்பட்டு 2 ஆண்டுகளில் 50 லட்சம் வீடுகள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளது. தற்போது ஒவ்வொரு 6 நாட்களுக்கும் 1 லட்சம் வீடுகளில் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 5.06 லட்சம் வீடுகளில் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
நேரடி பணப்பரிமாற்றம் மூலம் பயனாளிகளுக்கு ரூ.28,024 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 19 லட்சம் குடும்பங்கள் 'பூஜ்ய மின்சாரக் கட்டணம்' வசதியைப் பெற்று வருகின்றன. வீடுகளின் தேவை போக மீதமுள்ள உபரி மின்சாரத்தைச் சப்ளை செய்ததன் மூலம் 12 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் ரூ.421 கோடி வரை கூடுதல் வருமானம் ஈட்டியுள்ளன.
முந்தைய 10 ஆண்டுகளில் வெறும் 7.94 லட்சம் வீடுகளில் மட்டுமே கூரை சோலார் அமைப்புகள் பொருத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது இத்திட்டத்தின் வேகம் பன்மடங்கு அதிகரித்துள்ளது. மொத்தமாக ரூ.75,021 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டம், உலகின் மிகப்பெரிய கூரை சோலார் மின்சாரத் திட்டமாக உருவெடுத்துள்ளது. இதுவரை ஒட்டுமொத்தமாக 14.8 ஜிகாவாட் அளவுக்குச் சூரிய மின்சக்தி உற்பத்தித் திறன் உருவாக்கப்பட்டுள்ளது.