"அரசியல் துறவறம் பூணுகிறேன்" - பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் திடீர் விலகல்!

 

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது 88-வது பிறந்தநாளில், அரசியலில் இருந்து முற்றிலுமாக விலகுவதாக அறிவித்துள்ளது பாமக தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனது 88-வது பிறந்தநாளை முன்னிட்டு, திண்டிவனத்தை அடுத்த கோனேரிகுப்பத்தில் உள்ள சரஸ்வதி கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு பேசிய டாக்டர் ராமதாஸ், "இன்று எனக்கு 88-வது வயது தொடங்குகிறது. இன்று முதல் நான் அரசியல் துறவறம் பூணுகிறேன். இனி அரசியலைப் பேச மாட்டேன்; அரசியலுக்கு வழிகாட்டவும் மாட்டேன்" என அறிவித்தார்.

"என்னைப் பார்க்க வருகிறவர்கள் பார்த்துவிட்டு நலமா என்று மட்டும் கேட்டுவிட்டுச் செல்லலாம்; அங்கே அரசியல் பேசுவதற்கு இனி இடமில்லை" என்று அவர் கூறியுள்ளார். 

கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்துப் பேசிய அவர், பொறுப்புகளை அன்புமணி ராமதாஸிடம் ஒப்படைப்பதாகத் தெரிவித்தார்.  இனி பாமகவின் அனைத்து அரசியல் விவகாரங்களையும், முடிவுகளையும் அன்புமணி ராமதாஸ் பார்த்துக் கொள்வார் என்று குறிப்பிட்ட அவர், அன்புமணிக்கு கட்சியினரும் தானும் துணையாக இருப்போம் என்று தெரிவித்துள்ளார். 

தமிழக அரசியலில் முக்கியச் சக்தியாக பல வருடங்களாக விளங்கிய டாக்டர் ராமதாஸின் இந்தத் திடீர் அரசியல் துறவற அறிவிப்பு, பாமக தொண்டர்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.