"அதிமுகவின் வெற்றிக்கு பாமகவே முக்கிய காரணம்" - அன்புமணி ராமதாஸ் பெருமிதம்!

 

பாமக 38-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, அக்கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதங்களைக் கிளப்பியுள்ளது.

அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சட்டமன்றத் தேர்தலில் மாநிலம் முழுவதும் ஒரு குறிப்பிட்ட அரசியல் அலை வீசிய போதிலும், பாமக வலுவாகக் கால்ஊன்றியிருந்த பகுதிகளில் எதிர்க்கட்சிகளால் தங்களது செல்வாக்கை நிரூபிக்கவோ அல்லது எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தவோ முடியவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார். பாமகவின் வாக்கு வங்கி தங்களது கோட்டைகளில் எந்தவொரு சூழலிலும் சிதையாமல் உறுதியாக இருந்ததே இதற்கு முக்கியக் காரணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் கூட்டணிகள் மற்றும் தொகுதிகளின் வெற்றி குறித்து அவர் தனது அறிக்கையில்,  கடந்த தேர்தலில் கடுமையான போட்டிக்கு மத்தியிலும் சுமார் 35-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் தங்களது வெற்றியைப் பதிவு செய்ததற்குப் பாமகவின் களப்பணியும், தங்களின் வாக்கு வங்கியும்தான் மிக முக்கியக் காரணமாக அமைந்தது.

தற்போதைய சட்டமன்றத்தில் பாமக பெற்றுள்ள 4 இடங்கள் என்பது வெறும் சாதாரண எண்ணிக்கையல்ல; அரசியல் ரீதியாகவும், மக்கள் செல்வாக்கு ரீதியாகவும் அது 40 சட்டமன்ற இடங்களுக்குச் சமமானது. அரசியல் களத்தில் பாமகவின் முக்கியத்துவத்தையும், தங்களது தொண்டர்களின் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ள இந்த அறிக்கை, தற்போதைய அரசியல் சூழலில் கூட்டணிக் கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகள் இடையே உற்றுநோக்கத்தக்க ஒன்றாக மாறியுள்ளது.