'1 லட்சம் அரசு வேலை, ரூ.300 சிலிண்டர் மானியம், 5 புதிய மாவட்டங்கள்' - பாமக-வின் நிழல் பட்ஜெட் சிறப்பம்சங்கள்!

 

பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) 24-வது நிழல் நிதிநிலை அறிக்கையை (2026-27) கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்னையில் வெளியிட்டார். அதில் நிர்வாக மாற்றம், வேலைவாய்ப்பு மற்றும் மக்கள் நலத் திட்டங்கள் தொடர்பான பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

வருவாய் மற்றும் செலவினம்: 2026-27 நிதியாண்டில் மாநிலத்தின் வருவாய் வரவு ரூ.6,71,891 கோடியாகவும், செலவினம் ரூ.6,96,149 கோடியாகவும் இருக்கும். கனிம வளங்களை முறையாகக் கையாள்வதன் மூலம் வரி அல்லாத வருவாயாக ரூ.2,17,945 கோடி ஈட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள கடனை அடைக்க அசலாக ரூ.50,000 கோடி செலுத்தப்பட்டு, அடுத்த 10 ஆண்டுகளில் கடன் சுமை கட்டுக்குள் கொண்டுவரப்படும்.

செப்டம்பர் 17-ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் சமூகநீதி சர்வே பணிகள் தொடங்கப்படும். 5 ஆண்டுகளில் 6 லட்சம் அரசு வேலைகள் என்ற இலக்கின் முதல்கட்டமாக, நடப்பு நிதியாண்டின் எஞ்சிய 6 மாதங்களில் 1 லட்சம் பேருக்கு அரசு பணி வழங்கப்படும். இதில் 25,000 ஆசிரியர் பணியிடங்கள், 5,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் மற்றும் 17,000 குரூப்-4 பணியிடங்கள் அடங்கும்.

அரசு ஊழியர்களுக்கு வரும் 2027-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும். தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலைகள் வழங்கப்படும். அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000-ஆக உயர்த்தப்படும். சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.300 மானியம் (ஆண்டுக்கு அதிகபட்சமாக 6 சிலிண்டர்கள்) வழங்கப்படும்.

அக்டோபர் 2-ஆம் தேதி முதல் மாநிலத்தில் முழுமையான மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின்கட்டணம் செலுத்தும் முறை மாற்றப்பட்டு, மாதம் ஒருமுறை வசூலிக்கும் நடைமுறை கொண்டுவரப்படும். கர்ப்பிணிப் பெண்களுக்கான மகப்பேறு கால நிதி உதவி ரூ.25,000-ஆக உயர்த்தப்படும். கும்பகோணம், விருத்தாசலம், செய்யாறு (அல்லது ஆரணி), பொள்ளாச்சி மற்றும் பழனி ஆகிய 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும்.

காஞ்சிபுரம், திருப்பத்தூர், மயிலாடுதுறை, தென்காசி ஆகிய இடங்களில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும். ஊரக உள்ளாட்சித் தேர்தல் வரும் அக்டோபரில் ஒரே கட்டமாகவும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2027 பிப்ரவரியிலும் நடத்தப்படும்.

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும். பொதுத்துறை வங்கிகளில் பெற்ற கடனில் ரூ.1 லட்சம் வரை அரசே ஏற்கும். விவசாயத் தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.24,000 உரிமைத் தொகையும், வறட்சியால் குறுவை சாகுபடி செய்யாத விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10,000 இழப்பீடும் வழங்கப்படும்.

பெயர்ப் பலகைகளைத் தமிழில் எழுதாத கடைகளுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும்; 3 முறைக்கு மேல் மீறினால் வணிக உரிமம் ரத்து செய்யப்படும். காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதைச் சட்டப் போராட்டத்தின் மூலம் பாமக முறியடிக்கும்; புதிய நடுவர் மன்றம் அமைப்பதை ஏற்காது. அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு 90% மானியத்தில் மடிக்கணினிகள் வழங்கப்படும்.