இரட்டைச் சகோதரிகளுக்குப் பாலியல் தொல்லை - 39 வருட சிறைத்தண்டனை விதித்து திருவள்ளூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு!
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் இயற்றப்பட்ட போக்சோ சட்டத்தின் கீழ், கடுமையான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு நீதிமன்றங்கள் விரைவாகவும் முன்மாதிரியாகவும் தண்டனைகளை வழங்கி வருகின்றன. அந்த வகையில், உறவுமுறை முறைகேட்டில் ஈடுபட்டு சிறுமிகளுக்குப் பாலியல் வன்கொடுமை இழைத்த நபருக்கு 39 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துத் திருவள்ளூர் சிறப்பு நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் 57 வயது நபர் (தொழிலால் பெயிண்டர்). இவர் தனது மனைவியின் சகோதரியின் 13 வயதுடைய இரட்டை மகள்களுக்குத் தொடர்ச்சியாகப் பாலியல் ரீதியான தொல்லைகளை அளித்து வந்துள்ளார்.
இது குறித்துப் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் குடும்பத்தினர் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், கடந்த 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் 6-ஆம் தேதியன்று பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து குற்றவாளியைக் கைது செய்த போலீசார், நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கின் இறுதி விசாரணை திருவள்ளூர் மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசுத் தரப்பு மற்றும் எதிர் தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், நேற்று நீதிமன்ற நீதிபதி உமாமகேஸ்வரி தீர்ப்பை வாசித்தார்.
குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு மொத்தம் 39 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
சிறைத்தண்டனையுடன் சேர்த்து, குற்றவாளிக்கு 45,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராதத் தொகையைச் செலுத்தத் தவறும்பட்சத்தில், கூடுதல் காலம் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், இது போன்ற குற்றங்களில் ஈடுபட நினைப்பவர்களுக்கு எச்சரிக்கையாக அமையும் வகையிலும் நீதிமன்றம் இந்தத் தண்டனையை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.