சிறுமிக்கு பாலியல் தொல்லை... தவெக நிர்வாகி போக்சோ சட்டத்தில் அதிரடி கைது!

 

சென்னை காசிமேடு பகுதியில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகியைப் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த அந்தச் சிறுமி காசிமேட்டில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது. கடந்த 23-ம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த தவெக வட்டச் செயலாளர் தினேஷ் என்பவர் விளையாடிக்கொண்டிருந்த சிறுமியைத் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை மயிலாப்பூரில் உள்ள தனது குடும்பத்தினரிடம் கூறவே அவர்கள் ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில் போலீசார் கடந்த 4-ம் தேதி போக்சோ வழக்குப் பதிவு செய்து தினேஷைக் கைது செய்யத் தேடி வந்தனர். ஆனால் அவர் ஆர்.கே.நகர் தொகுதி தவெக வேட்பாளர் மரிய வில்சனுக்கு ஆதரவாக வாக்கு எண்ணும் மையத்திற்குச் சென்றிருந்ததால் அப்போது கைது செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த தினேஷை நேற்று இரவு போலீசார் சுற்றி வளைத்துப் பிடித்துக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட தினேஷ் சென்னை 43-வது வார்டு தவெக வட்டச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது. சிறுமியை மிரட்டியது மற்றும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடரப்பட்டு அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.