ஆபாச படம் காட்டி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த  கணக்குப்பிள்ளை !  

 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள ஒரு சமூகத்திற்குச் சொந்தமான கோயில் வீட்டில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதியினர் தங்களது 12 வயது மகளுடன் கடந்த 2020 முதல் தங்கிப் பராமரிப்புப் பணிகளைச் செய்து வந்தனர். அந்த சிறுமி அருகில் உள்ள பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர்களது பெற்றோர் பகல் நேரத்தில் வேலைக்குச் சென்றுவிடுவதால், அதே பகுதியைச் சேர்ந்த கோயில் கணக்குப்பிள்ளையான 62 வயது சுப்பிரமணியன் என்பவர் மட்டும் பகலில் அங்கு வந்து கணக்கு வழக்குகளைக் கவனித்துள்ளார்.

அப்போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தைப் பயன்படுத்திக் கொண்ட சுப்பிரமணியன், அந்த சிறுமிக்கு தின்பண்டங்களை வாங்கிக் கொடுத்தும், தனது கைபேசியில் ஆபாசப் படங்களைக் காண்பித்தும் கடந்த மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த கொடுமை குறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அவமானம் மற்றும் மகளின் எதிர்காலம் கருதி பயந்துபோன பெற்றோர், காவல்துறையில் புகார் அளிக்காமல் கடந்த 2023 ஆம் ஆண்டு மகளை அழைத்துக் கொண்டு தங்களது சொந்த ஊருக்கே திரும்பிச் சென்றுவிட்டனர்.

இந்நிலையில் அவர்களைக் கோயில் வீட்டில் வேலைக்கு அமர்த்திய முருகப்பன் என்பவர், சமீபத்தில் தம்பதியைச் சந்தித்து வேலை நின்றதற்கான காரணத்தைக் கேட்டுள்ளார். அப்போது சுப்பிரமணியன் செய்த அசிங்கமான செயல்களைப் பெற்றோர் கண்ணீருடன் விவரித்தனர். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் கொடுத்த தைரியத்தில், காரைக்குடி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து சுப்பிரமணியனை நேரில் அழைத்து விசாரணை நடத்திய காவல்துறையினர், அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர்.