தவெக ஆட்சியை கவிழ்க்க சதித் திட்டம் - செந்தில்பாலாஜி தம்பியைத் தேடும் போலீஸ்.. முக்கிய ஆவணங்கள் சிக்கியது!
ஊத்தங்கரை தவெக எம்.எல்.ஏ-விடம் ரூ.35 கோடி பேரம் பேசிய வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஆதரவாளர்கள் இருவர் கைதாகியுள்ள விபரங்கள் வெளியானதைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் ஆட்சியைப் பலவீனப்படுத்த முயன்றதாகக் கூறப்படும் சதித் திட்டம் குறித்துப் புதிய விபரங்கள் வெளிவந்துள்ளன.
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியை வீழ்த்தும் நோக்கில் சதித் திட்டங்கள் தீட்டப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில், சென்னை காவல்துறையினர் தங்களது புலனாய்வை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பியான அசோக் என்பவருக்கு இந்த கோடிக் கணக்கான பேர விவகாரத்தில் நேரடித் தொடர்பு இருப்பதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில், சென்னை போலீசார் கரூருக்கு விரைந்தனர்.
கரூரில் அமைந்துள்ள அசோக்கின் குடியிருப்பு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் சென்னை தனிப்படை போலீசார் தீவிரச் சோதனைகளை மேற்கொண்டனர். இந்தச் சோதனையின் போது, தவெக சட்டமன்ற உறுப்பினர்களைப் பேரம் பேசி இழுக்க முயன்ற சதித்திட்டம் தொடர்பான பல்வேறு முக்கிய ஆவணங்கள் மற்றும் கணக்கு விபரங்களைக் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சோதனை நடவடிக்கையை முன்கூட்டியே அறிந்த அசோக், தனது இருப்பிடத்திலிருந்து தப்பியோடியுள்ளார். தலைமறைவாக உள்ள அவரை உடனடியாகக் கைது செய்யும் நோக்கில், சென்னை காவல்துறையினர் பல்வேறு தனிப்படைகளை அமைத்து தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
தவெக அரசைச் சட்டமன்ற வாக்கெடுப்பு மூலம் நெருக்கடிக்குள்ளாக்கத் திட்டமிட்ட ரூ.35 கோடி பேர வழக்கில், செந்தில்பாலாஜியின் தம்பி அசோக்கின் பெயரும் இணைந்துள்ளதால் கொங்கு மண்டல அரசியல் வட்டாரங்களிலும், தமிழகத் தலைநகரிலும் சலசலப்புகள் அதிகரித்துள்ளன.