விளையாட்டால் விபரீதம்... கதவை உடைத்து உள்ளே சென்ற போலீஸ் !
அமெரிக்காவில் தனியாக வசிக்கும் முதியவர்கள் நலமுடன் இருக்கிறார்களா என்பதை உறுதி செய்ய 'Are You Okay?' என்ற சிறப்புச் சேவை காவல்துறையினரால் வழங்கப்பட்டு வருகிறது. இந்தச் சேவையின் கீழ், முதியவர்களுக்குத் தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் காவல்துறை தரப்பிலிருந்து போன் கால் வரும். அவர்கள் நலமாக இருந்தால் போனை எடுத்துத் தகவல் சொல்ல வேண்டும். ஒருவேளை அவர்கள் போனை எடுக்கத் தவறினால், ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்திருக்குமோ என்ற அச்சத்தில் காவல்துறை உடனடியாக அவர்களின் வீட்டிற்கு விரைந்து செல்லும்.
இதேபோல், ஒரு மூதாட்டிக்குத் தொடர்ந்து சில நாட்களாக காவல்துறையினர் போன் செய்துள்ளனர். ஆனால் அவர் அழைப்பை ஏற்கவில்லை. இதனால் பதற்றமடைந்த அவரது குடும்பத்தினர் மற்றும் போலீசார், அந்த மூதாட்டி வீட்டிற்குள் உயிரிழந்திருக்கலாம் அல்லது மயக்கமடைந்திருக்கலாம் என்று கருதி உடனடியாக அவர் வீட்டிற்குச் சென்றனர். கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்ததால், காலதாமதம் செய்யாமல் போலீசார் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தனர்.
வீட்டிற்குள் நுழைந்த போலீசாருக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அங்கே அந்த மூதாட்டி எவ்வித பாதிப்பும் இன்றி மிகவும் சுறுசுறுப்பாக மொபைலில் கேம் விளையாடிக் கொண்டிருந்தார். கேமில் முழுமையாக மூழ்கிப் போனதால், போலீசாரின் அழைப்பு அவருக்குக் கேட்கவே இல்லை என்பது அப்போதுதான் தெரியவந்தது. மூதாட்டி நலமாக இருப்பதை உறுதி செய்த போலீசார், ஒருபுறம் நிம்மதி அடைந்தாலும், கேமிற்காக இவ்வளவு பெரிய களேபரம் நடந்ததை எண்ணி வியப்பில் ஆழ்ந்தனர். இந்தச் சுவாரசியமான சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.