பிஆர்எஸ் தலைவர் கவிதாவுக்கு எதிராக ஆபாசமாகப் பதிவிட்ட காவலர் இடைநீக்கம்!

 

தெலங்கானா ரக்ஷண சேனா (பிஆர்எஸ்) தலைவர் கல்வகுந்த்லா கவிதா குறித்து சமூக வலைதளங்களில் ஆபாசமான, அவதூறான கருத்துகளைப் பதிவிட்ட ஆயுதப் படைக்காவலர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சைபாராபாத் காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட நகர ஆயுதக் காவல் படைத் தலைமையகத்தில் காவலராகப் பணியாற்றும் கே. அனில் என்பவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிஆர்எஸ் தலைவர் கவிதாவைக் குறிவைத்து ஆபாசமான, தரக்குறைவான மற்றும் அவதூறான உள்ளடக்கங்களை அனில் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார். இது பொதுவெளியில் பெரும் சர்ச்சையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

காவல்துறை விதிகளுக்கு முரணாகச் செயல்பட்டதுடன், பெண் ஒருவரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டதற்காக அனில் மீது கடந்த செப்டம்பர் 6 அன்று ஹைதராபாத் சைபர் குற்றக் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பாரதிய நியாய சம்ஹிதா பிரிவுகள் 75, 79 மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 67 ஆகியவற்றின் கீழ் இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது.

குடிமைப் பணி நடத்தை விதிகளை மீறிய காரணத்தினால், செப்டம்பர் 2-ஆம் தேதியன்றே அவர் தற்காலிகமாகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சைபாராபாத் காவல் ஆணையரகம் அறிவித்துள்ளது. மேலும், அவர் பதிவுகளை வெளியிடப் பயன்படுத்திய செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுத் தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், துறைசார்ந்த விசாரணையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான முறைகேடுகளைத் தெலங்கானா காவல்துறை ஒருபோதும் சகித்துக்கொள்ளாது என்று அதிகாரிகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.