சிதம்பரம் அருகே போலீசார் குவிப்பு... அம்பேத்கர் சிலை சேதம் - கிராம மக்கள் போராட்டம்!

 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே மர்ம நபர்களால் அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கொத்தங்குடி பகுதியில் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சிலை சேதப்படுத்தப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்தும், குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தியும் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாகத் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் 2 இளைஞர்களைக் காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால், அந்த இளைஞர்களிடம் விசாரணை நடத்துவதற்கு அவர்களின் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்து காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால், சிதம்பரம் டி.எஸ்.பி தலைமையில் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டுள்ளனர்.