போலீசார் குவிப்பு... நள்ளிரவைக் கடந்தும் தொடர்ந்த தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் - இன்று வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிப்பு!

 

பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாநகராட்சி அலுவலக வளாகத்திற்குள் (ரிப்பன் மாளிகை) தூய்மைப் பணியாளர்கள் நடத்தி வரும் போராட்டம் இரவிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் மற்றும் தினசரி ஊதியத்தை உயர்த்த வேண்டும். பணிபுரியும் பெண்களுக்கு மகப்பேறு விடுமுறை, மாதவிடாய் கால விடுமுறை மற்றும் பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

தங்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரிப் பணியாளர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுகிறது.

காவல் துறை அதிகாரியைக் கண்டிக்கும் வகையில், சென்னை மாநகராட்சியின் 3 மண்டலங்களைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.