கடும் எதிர்ப்புகளுக்குப் பின் பெரியார், அண்ணா பிறந்தநாள் பேரணிக்கு காவல்துறை அனுமதி!
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்பட உள்ள பேரணிக்குக் கடுமையான எதிர்ப்புகள் எழுந்த நிலையில், காவல்துறையினர் சில நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் நாளை செப்டம்பர் 15-ம் தேதியன்று அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு ஊர்வலம் நடத்த அனுமதிக்கக் கோரி, நகர மன்றத் தலைவர் சௌந்தர்ராசன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனைப் பரிசீலித்த குடியாத்தம் துணை கண்காணிப்பாளர், சில குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் காலை 10 மணிக்கு ஊர்வலம் செல்ல அனுமதி வழங்கியுள்ளார்.
ஊர்வலம் செல்லும் போது பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் சாலையின் இடதுபுறமாகவும், அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் நான்கில் ஒரு பகுதியை மட்டுமே பயன்படுத்தியும் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஊர்வலத்தின் போது வழியில் வாகனங்களை நிறுத்தக் கூடாது என்றும், அவசர உதவிக்காக வரும் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு உடனடியாக வழிவிட வேண்டும் எனவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்குக் காவல்துறை தரப்பில் கண்டிப்பான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.