சீருடையில் ரீல்ஸ் வெளியிட்டதால் சிக்கிய காவலர்கள்... சென்னையில் மட்டுமே 14 பேர் பட்டியல் வெளியீடு!

 

சமூக வலைதளங்களில் காவல்துறை சீருடை அணிந்து ரீல்ஸ் வெளியிட்டதாகச் சென்னையில் மட்டும் 14 காவலர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. விதிகளை மீறிய காவலர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ்நாடு முழுவதும் சீருடையில் ரீல்ஸ் வெளியிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவல்துறை ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. அதனைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் சீருடையுடன் ரீல்ஸ் வெளியிடும் காவலர்களைக் கண்காணிக்கக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் கண்காணிப்பில் சென்னையில் மட்டும் 14 காவலர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சீருடை அணிந்து ரீல்ஸ் வெளியிட்டது தெரியவந்துள்ளது.

சர்ச்சைக்குரிய வீடியோக்களுடன் சம்பந்தப்பட்ட காவலர்களின் விவரங்கள் உரிய காவல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. விதிகளை மீறும் காவலர்கள் மீது காவல்துறை நடத்தை விதிகளின்படி துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

காவல்துறை சீருடையின் கண்ணியம், ஒழுக்கம் மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையைப் பாதுகாக்கும் வகையில் இந்தக் கட்டுப்பாடுகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. விதிகளை மீறும் காவலர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.