கரூர் விருந்தினர் மாளிகையில் முதலமைச்சர் விஜய்க்கு காவலர்கள் மரியாதை
கரூர் மாவட்ட மக்கள் சந்திப்பு மற்றும் பல்வேறு அரசு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காகக் கரூர் வந்துள்ள முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்க்கு, அங்குள்ள அரசு விருந்தினர் மாளிகையில்காவல்துறை சார்பில் சிறப்பான வரவேற்பும் அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது.
கரூர் அரசு விருந்தினர் மாளிகைக்கு வருகை தந்த முதலமைச்சரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்ஆகியோர் முறைப்படி வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை காவலர்கள் துப்பாக்கிகளை ஏந்தி, கம்பீரமாக அணிவகுத்து நின்று முதலமைச்சருக்குக் 'கார்டு ஆஃப் ஹானர்' எனப்படும் முறைப்படியான அரசு மரியாதை செலுத்தினர். முதலமைச்சர் விஜய் இந்த அணிவகுப்பைப் பார்வையிட்டு, காவலர்களின் மரியாதையைத் தலைவணங்கி ஏற்றுக் கொண்டார்.
கரூரில் அண்மையில் அரசியல் ரீதியான பரபரப்புகள் நிலவி வரும் சூழலில், முதலமைச்சர் தங்கியுள்ள விருந்தினர் மாளிகை பகுதிக்கு அவரை நேரில் வரவேற்கத் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள், மாவட்டப் பொறுப்பாளர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் அங்குச் குவிந்தனர்.
பொதுமக்கள் மற்றும் தொண்டர்களின் வருகை மிக அதிகமாக இருந்ததால், எவ்வித அசம்பாவிதமும் இன்றிப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், கரூர் மாவட்டக் காவல் துறை சார்பில் விருந்தினர் மாளிகை வளாகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் முழுவதும் நூற்றுக்கணக்கான போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுப் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.