கொடூரமாக தாக்கப்பட்டு, நடுரோட்டில் வீசப்பட்ட 4 வயது சிறுமி மீட்பு - காவல்துறை தீவிர விசாரணை!

 

இலங்கை கண்டி - வத்தேகம பகுதியில் கொடூரமாகத் தாக்கப்பட்டு, ஆள் நடமாட்டம் இல்லாத சாலையில் கைவிடப்பட்ட 4 வயது சிறுமியை காவல்துறையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

கண்டி வத்தேகமவில் உள்ள யடிராவன சாலையில் காயங்களுடன் சிறுமி ஒருவர் தனியாகக் கிடப்பதாகக் காவல்துறையின் அவசர உதவி எண்ணிற்குத் தகவல் கிடைத்தது. இது குறித்த தகவலின் அடிப்படையில் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்த வத்தேகம காவல்துறையினர், படுகாயமடைந்த அந்த 4 வயது சிறுமியை மீட்டு சிகிச்சைக்காகக் கண்டி தேசிய மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இன்று காலை 7 மணியளவில் ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் அச்சிறுமியைக் காயங்களுடன் அங்கு வீசிச் சென்றிருக்கலாம் எனப் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். மீட்கப்பட்ட சிறுமியால் தனது பெற்றோர் குறித்தோ அல்லது தான் வசிக்கும் இருப்பிடம் குறித்தோ எந்த விவரத்தையும் கூற முடியாத நிலை உள்ளது.

இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, சிறுமியை ஏற்றி வந்த ஆட்டோவைக் கண்டறியும் பணியில் வத்தேகம காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.