துப்பாக்கிச் சூட்டில் 6 போலீசார் உட்பட 25 பேர் கொடூரக் கொலை!
மத்திய அமெரிக்க நாடான ஹொண்டுராஸின் கடலோரப் பகுதிகளில் நேற்று தனித்தனியாக நடத்தப்பட்ட இரண்டு வெவ்வேறு துப்பாக்கிச் சூடு சம்பவங்களில், 6 உயர் போலீஸ் அதிகாரிகள் உட்படக் குறைந்தது 25 பேர் சம்பவ இடத்திலேயே கொடூரமாகச் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்த அடுத்தடுத்த மெகா ஆயுதத் தாக்குதல்கள் ஒட்டுமொத்த சர்வதேச நாடுகள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் மத்தியில் தற்பொழுது பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
வடக்கு ஹொண்டுராஸின் துரஜிலோ நகரில் அமைந்துள்ள ஒரு பெரிய விவசாயத் தோட்டத்தில் புகுந்த மர்மக் கும்பல் ஒன்று, அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த சாமானியத் தொழிலாளர்கள் மீது அசுர வேகத்தில் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. இந்த கோரத் தாக்குதலில் தோட்டத்தில் பணியாற்றிய 19 தொழிலாளர்கள் தங்களின் உயிரை இழந்துள்ள நிலையில், நிலம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் தொடர்பான நீண்டகாலப் பகை காரணமாகவே இந்தத் துப்பாக்கிச் சூடு அரங்கேறியுள்ளதாகத் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து ஓமோவா நகரின் எல்லையோரப் பகுதியில், அங்குள்ள ரவுடி கும்பல்களை ஒடுக்கும் அவசரப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரின் வாகனத்தை நோக்கியும் மற்றொரு ஆயுதக் கும்பல் அதிரடித் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் ஒரு மூத்த அதிகாரி உட்பட 6 போலீசார் சம்பவ இடத்திலேயே வீர மரணம் அடைந்துள்ள நிலையில், இந்த இரண்டு அதிர்ச்சி சம்பவங்கள் குறித்து அந்நாட்டு ராணுவம் மற்றும் தடயவியல் நிபுணர்கள் தற்பொழுது தீவிர கூட்டு விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.