பெண்ணின் படுக்கையறையில் சட்டவிரோத சோதனை... போலீசாருக்கு உயர் நீதிமன்றம் ரூ.10,000 அபராதம்!

 

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடந்த விபத்து வழக்கு ஒன்றில், அங்குள்ள போலீசார் உரிய சட்ட வழிமுறைகளைப் பின்பற்றாமல் 26 வயதுடைய பெண்ணின் வீட்டிற்குள் புகுந்தனர். அவரது படுக்கையறையில் நுழைந்து சோதனை நடத்தியதோடு, அவரது செல்போனையும் சட்டவிரோதமாகப் பறிமுதல் செய்தனர். இந்தச் செயலை எதிர்த்துப் பாதிக்கப்பட்ட பெண் மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஊர்மிளா ஜோஷி மற்றும் ஜோஷி பால்கே ஆகியோர் அடங்கிய அமர்வு, படுக்கையறையில் போலீசார் நுழைந்து சோதனை நடத்தியது பெண்ணின் தனிமனித உரிமைக்கு எதிரானது எனக் கண்டனம் தெரிவித்தது. மேலும் உரிய விதிகளைப் பின்பற்றாமல் சட்டவிரோதமாக நுழைந்த போலீசாரிடமிருந்து 10,000 ரூபாய் அபராதமாக வசூலித்து, அதனை 2 மாதங்களுக்குள் அந்தப் பெண்ணுக்கு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசியலமைப்புச் சட்டத்தின் 21 வது பிரிவு உறுதி செய்யும் வாழ்வுரிமை மற்றும் தனிமனித சுதந்திரத்தின் முக்கிய அங்கமாகத் தனிமனித ரகசியம் காக்கும் உரிமை திகழ்கிறது என நீதிபதிகள் கூறினர். அதனை எக்காரணம் கொண்டும் மீறக்கூடாது என்றும், வழக்குப் புலனாய்வு என்ற பெயரில் போலீசார் சட்டவிரோதமாகக் கைப்பற்றும் ஆதாரங்களுக்கு எந்தவித சட்டப்பூர்வ அங்கீகாரமும் கிடையாது என்றும் தங்களின் தீர்ப்பில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர்.