ஜந்தர் மந்தரில் மீண்டும் போராட்ட மிரட்டல்... குவிக்கப்படும் போலீசார்!
போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறாவிட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகக் காக்ரோச் ஜனதா பார்ட்டி அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த புதிய மிரட்டலைத் தொடர்ந்து டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் ஒன்றிய அரசு தனது பாதுகாப்பைத் தீவிரமாகப் பலப்படுத்தி வருகிறது. அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுப்பதற்காக டெல்லி காவல்துறை மற்றும் துணை ராணுவப் படையினர் பெருமளவில் அந்தப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
மீண்டும் போராட்டம் வெடிக்கும் சூழல் நிலவுவதால் ஜந்தர் மந்தர் பகுதியில் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. போராட்டக்காரர்கள் எக்காரணம் கொண்டும் பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் ஊடுருவாமல் இருக்க இரும்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், அந்த இரும்புத் தடுப்புகளை ஒன்றாகச் சேர்த்து வெல்டிங் செய்து நிரந்தரமாக இணைக்கும் பணிகளில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
எதிர்காலத்தில் போராட்டங்கள் நடக்கும் போது இரும்புத் தடுப்புகளைப் போராட்டக்காரர்கள் அகற்றிவிடக் கூடாது என்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. டெல்லி காவல்துறைத் தலைமையின் நேரடிக் கண்காணிப்பில் துணை ராணுவப் படையினரும் இணைந்து அங்கு முழுமையான பாதுகாப்பை உறுதி செய்து வருகின்றனர். காக்ரோச் ஜனதா பார்ட்டியின் மீண்டும் போராட்ட எச்சரிக்கை காரணமாக ஜந்தர் மந்தர் பகுதி முழுவதும் தற்போது பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.