போலியோ சொட்டு மருந்து முகாமில் ரீல்ஸ்... தவெக ஒன்றிய செயலாளர் தற்காலிக நீக்கம்!
விருதுநகர் மாவட்டத்தில் அரசுப் பொது சுகாதாரத்துறை சார்பில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமில் நுழைந்து தேவையற்ற சர்ச்சையை ஏற்படுத்தியதாக தவெக முக்கிய நிர்வாகி ட்சியின் அடிப்படைப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
விருதுநகர் பகுதியில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமிற்குள் தவெக மத்திய ஒன்றிய செயலாளர் முத்துவேல் என்பவர் தனது ஆதரவாளர்களுடன் திடீரென நுழைந்துள்ளார். அங்குப் பணியில் இருந்த அரசு மருத்துவ ஊழியர்களிடம் ஏதோ தான் ஒரு அரசு அதிகாரி விசாரணை நடத்துவது போன்ற தோரணையில், முத்துவேல் ரீல்ஸ் வீடியோ எடுத்து அதனைச் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
மேலும், உரிய மருத்துவ அனுமதியின்றி முகாமில் இருந்த குழந்தைக்கு அவரே நேரடியாகப் போலியோ சொட்டு மருந்து கொடுத்ததாகவும், இதனால் குழந்தையின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதாகவும் அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் இருந்து கடுமையான புகார்கள் எழுந்தன.
அரசு ஊழியர்களின் பணிக்கு இடையூறு விளைவித்தது மற்றும் கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் கற்பிக்கும் வகையில் செயல்பட்டது தொடர்பாகத் தவெக தலைமைக்குத் தகவல் சென்றது. இதனைத் தொடர்ந்து, கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின் பேரில், தவெக மத்திய ஒன்றிய செயலாளர் முத்துவேல் கட்சியின் அடிப்படைப் பொறுப்புகள் அனைப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சமீபகாலமாக அரசியல் கட்சி நிர்வாகிகள் விளம்பரத்திற்காக இது போன்ற ரீல்ஸ் வீடியோக்களை எடுத்துச் சர்ச்சையில் சிக்கி வரும் நிலையில், தவெக தலைவர் விஜய் தரப்பில் இருந்து உடனடியாக எடுக்கப்பட்டுள்ள இந்த ஒழுங்கு நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் உற்றுநோக்கப்பட்டு வருகிறது.